தமிழகத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த இன்று (10-ம் தேதி)முதல் வருகிற 24-ம் தேதி வரைமுழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே அரசு, தனியார் பேருந்துகள், வாடகைக் கார்கள் இயங்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியத் துறைகளான மருத்துவம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, காவல்துறை, ஊர்க்காவல் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, மாவட்டநிர்வாகம், மாவட்ட தொழில் மையங்கள், மின்சாரம், குடிநீர், உள்ளாட்சித் துறைகள், வனத்துறைஅலுவலகங்கள், கருவூலங்கள், சமூக நலன் மற்றும் மகளிர்உரிமைத் துறை அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் பணிக்குச் சென்று வர ஏதுவாக அரசுப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி, கோவில்பட்டி, சங்கரன்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், திசையன்விளை, ராதாபுரம், பாபநாசம், காவல்கிணறு ஆகிய இடங்களில் இருந்து திருநெல்வேலிக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகள் காலை 8 மணிக்கு புறப்படும். வேலைக்குச் சென்றவர்கள் திரும்பி வர வசதியாக திருநெல்வேலியில் இருந்து மீண்டும் ஏற்கெனவே புறப்பட்ட இடங்களுக்குமாலை 6 மணிக்கு பேருந்துகள்இயக்கப்படும். இந்த பேருந்துகளில் பயணம் செய்யும் அரசு அலுவலர்கள் தங்களது பணியாளர் அட்டையை அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.