Regional03

பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்க ஏதுவாக - கோவையில் 447 சாதாரண கட்டணப் பேருந்துகள் இயக்கம் :

செய்திப்பிரிவு

பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்க ஏதுவாக கோவையில் நேற்று 447 சாதாரண கட்டணப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதுதொடர்பாக கோவை அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறும்போது ‘‘கரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாகபயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததால் நேற்றுமுன்தினம் வரை 369 சாதாரண கட்டணப்பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. பெண்கள் கட்டணமில்லாமல் பேருந்துகளில் பயணிக்கலாம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி நேற்று 78 பேருந்துகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு, மொத்தம் 447 பேருந்துகள் இயக்கப்பட்டன. சிவப்பு நிற பேருந்துகள் தவிர, மற்ற நகரப் பேருந்துகளில் பெண்கள் எங்கு வேண்டுமானாலும் ஏறி, இறங்கிக் கொள்ளலாம்"என்றனர்.

இந்த பேருந்துகளில் பயணித்த பெண்கள் சிலர் கூறும்போது, ‘‘குறைந்த சம்பளத்தில் கடைகள், தனியார் தொழில் நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை பேருந்து பயணத்துக்காக செலவிட வேண்டியதாக இருந்தது. பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசம் என்ற முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பால், பல்வேறு தரப்பு பெண்களும் பயன்பெறுவார்கள்’’ என்றனர்.

SCROLL FOR NEXT