ரோட்டரி சங்கங்களின் சார்பில், இஎஸ்ஐ மற்றும் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவையில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக சராசரியாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது ஆக்சிஜன் முதன்மைத் தேவையாக உள்ளது.
கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க அரசு நிர்வாகத்தின் சார்பில் ஒருபுறம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல, தன்னார்வ அமைப்புகள் சார்பிலும், மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தடையின்றி கிடைக்க தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள ரோட்டரி சங்கங்களின் சார்பில், கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரோட்டரி சங்கத்தின் மாவட்ட இயக்குநர் கூறும்போது, ‘‘மாவட்டத்தில் உள்ள 41 ரோட்டரி சங்கங்கள் இணைந்து அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கட்டமைப்பை ஏற்படுத்த திட்டமிட்டோம். அதன்படி, ரோட்டரி சங்கங்களிடம் இருந்து நிதி திரட்டப்பட்டது. பின்னர், முதல்கட்டமாக கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் 2 ஆக்சிஜன் உற்பத்தி கட்டமைப்புகள் (பிளான்ட்), இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் ஒரு ஆக்சிஜன் உற்பத்தி கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ.80 லட்சம் மதிப்பில் இந்த மூன்று கட்டமைப்புகளும் அமைக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு பிளான்டில் இருந்தும் ஒரு நிமிடத்துக்கு 200 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு பெறப்படும். மாலிக்குலர் தொழில்நுட்பத்தின் மூலம், காற்றில் உள்ள ஆக்சிஜனை இழுத்து, 96 சதவீதம் ஆக்சிஜனாக உற்பத்தி செய்து நமக்கு வழங்கும். இதன் மூலம் மேற்கண்ட அரசு மருத்துவ மனைகளில் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும். இந்த கட்டமைப்புகளில் உற்பத்திக்கான இறுதிகட்டப் பணிகள் நடந்து வருகின்றன. நாளை (மே 10) முதல் பயன்பாட்டுக்கு வரும்.
கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில் இதேபோல, மேலும் சில ஆக்சிஜன் உற்பத்தி கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளன. மற்றொரு ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவ மனை வளாகத்தில் 72 சிலிண்டர்களுக்கு தேவையான ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கட்டமைப்பும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது,’’ என்றார்.