சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கில், 150 படுக்கைகளுடன் கரோனா தற்காலிக சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சேலத்தில் தற்போது, 46 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு சுகாதாரப்பணிகள், பாதுகாப்பு மற்றும் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சேலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,866 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், கரோனா தற்காலிக சிகிச்சை மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் செயல்பட்டு வரும் மணியனூர் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் 57 பேர்களும் (128 படுக்கை வசதி), கோரிமேடு அரசு பெண்கள் கலை அறிவியல் கல்லூரி சித்தா சிகிச்சை மையத்தில் 100 பேரும் (100 படுக்கை வசதி), தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் 165 பேரும் (227 படுக்கைகள்) சிகிச்சை பெற்று வரு கின்றனர்.
இந்நிலையில், கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், கூடுதலாக தற்காலிக சிகிச்சை மையங்களை அமைக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.
தற்காலிக மையம் அமைக்கப்பட்டு வரும் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:
சேலம் தில்லைநகர் பகுதியில் உள்ள ஐஐஎச்டி. வளாகத்தில் ஆண்கள் விடுதி உட்பட பல்வேறு பகுதிகளில், கூடுதலாக தற்காலிக சிகிச்சை மையங்களை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கில் கரோனா நோய்களை வகைப்படுத்தும் மையத்துடன் 150 படுக்கை வசதிகளுடன் கூடிய தற்காலிக சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இம்மையம் ஓரிரு நாட்களில் செயல்பட தொடங்கும். இவ்வாறு கூறினார்.