அரசுப் பணியை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, நகர்ப்புற செவலியர்கள் சங்கத்தினர் நேற்று, கிருஷ்ணகிரிக்கு வந்த கரோனா தடுப்பு சிறப்பு அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் நகர்ப்புற செவிலியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவி கலாவதி தலைமையில் நேற்று செவிலியர்கள், கிருஷ்ணகிரிக்கு வந்த கரோனா தடுப்பு அலுவலர் பீலா ராஜேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் நகர்ப்புற செவிலியர்களாக சுமார் 1500 பேர் பணியாற்றி வருகிறோம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். எங்களுக்கு பணி ஊதியமாக ரூ.11 ஆயிரம் வழங்கப்படுகிறது.
நாங்கள் கர்ப்பகால பெண் களை கண்டறிதல், குழந்தைகள் பிறப்பு உதவித்தொகை பெற்று தருவது, மகப்பேறு நிதியுதவி பெற்றுத் தருவது, இரும்புச்சத்து, குடற்புழு மாத்திரை வழங்கல், அரசு, தனியார் பள்ளிகளுக்கு சென்று மாத்திரை வழங்கல், தடுப்பூசி போடுவது உள்ளிட்ட பணிகளுடன் கரோனா காலகட்டங்களிலும், தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். மேலும், நகர்ப்புற வீடுகள் தோறும் சென்று, கரோனா விழிப்புணர்வு பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
குறிப்பாக, மாவட்ட, மாநில எல்லைகளில் கரோனா தடுப்பு பணிகளில் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகிறோம். குறைவான ஊதியம் பெற்று, நகர்ப்புறங் களில் வசித்து வருவதால், வீட்டுவாடகை, மின் கட்டணம் மற்றும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கிறது. மேலும், ஆரம்ப சுகாதார நிலையம் சென்று, அதன்பின், மக்களையும் சந்திக்க வேண்டியிருக்கும் சூழலால், ஊதியம் போதுமானதாக இல்லை.
எனவே எங்களுக்கு, அரசு அடிப்படை ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் செய்து கொடுக்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்நிகழ்வில் சங்க நிர்வாகிகள் அம்பிகா, மகேஸ்வரி, ராணி, கோகிலா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவர்கள் உடனி ருந்தனர்.