திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ச.ராஜேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விளையாட்டுத்துறையில் தேசிய, பன்னாட்டு அளவில் பங்கேற்றுசாதனைகள் படைத்து வெற்றி பெற்ற திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் தற்போதுநலிந்த நிலையிலுள்ள விளையாட்டுவீரர்களுக்கு மாத ஓய்வூதிய உதவி தொகை ரூ.3 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான தகுதிகள்: தேசிய அளவிலான போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்றிருக்க வேண்டும். போட்டிகளில் முதல்,2-ம், 3-ம் இடங்களை பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள், இந்திய ஒலிம்பிக்சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், சர்வதேச போட்டிகளாயின் குறைந்த பட்சம் 6 நாடுகள் பங்கேற்றிருக்க வேண்டும்.
இளவயதில் பங்கேற்ற, வெற்றிபெற்ற போட்டிகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். கடந்த ஏப்ரல் முதல்தேதியில் 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரால் சான்றொப்பமிட்ட விளையாட்டு சான்றிதழ் நகல்கள், வருமான சான்று நகல், வயது சான்று நகல் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
மத்திய அரசின் விளையாட்டு வீரருக்கான ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மத்திய, மாநில அரசின்கீழ் ஓய்வூதியம் பெறுவோர் இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெறத்தகுதியில்லை. முதியோருக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் இத் திட்டத்தில் ஓய்வூதியம் பெறமுடியாது.
www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் 19-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு 0462 257 2632 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.