கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ரெம்டெசிவிர் மருந்து விற்பனை திருச்சியில் நேற்று தொடங்கியது.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு ரெம்டெசி விர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு தேவைப்படும் ரெம்டெசிவிர் மருந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று முன் தினம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற மா.சுப்பிரமணியன், சென்னை மட்டுமின்றி திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட இடங் களிலும் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள அரசு இயன்முறை சிகிச்சைக் கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நேற்று தொடங்கியது. தலா 100 மில்லி கிராம் கொண்ட 6 ஊசி மருந்தின் விலை ரூ.9.408 ஆகும்.
இந்த மருந்து தேவைப்படு வோர் மருத்துவரின் மருந்து சீட்டு(அசல்- அதில் நோயாளியின் பெயர், நோயின் தீவிரம், ரெம்டெசிவிர் மருந்தின் தேவை, மருத்துவரின் கையொப்பம், முத்திரை, தொலைபேசி எண், மருத்துவப் பதிவு எண் ஆகியவை கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்), ஆர்டிபிசிஆர் அறிக்கை அல்லது சிடி ஸ்கேன் அறிக்கை, நோயாளியின் ஆதார் கார்டு அசல் மற்றும் நகல், மருந்து வாங்க வருபவரின் ஆதார் கார்டு நகல் ஆகியவற்றை எடுத்துவந்து காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் மருந்து விற்பனை கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.