Regional03

குழித்துறை, தக்கலை அரசு மருத்துவமனைகளில் - ஆக்சிஜன் தயாரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை : அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில்கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய குழித்துறை, தக்கலை அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பு மையம் அமைக்கப்படும் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கடந்த இரு வாரங்களாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை அதிகமாக உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை மேற்கொள்பவர்களின் தேவைக்கேற்ப ஆக்சிஜன் வந்து கொண்டிருக்கிறது. இதுபோல் தினமும் 3,500 டோஸ் கரோனா தடுப்பூசி வருகிறது.

அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த பின்னரே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குழித்துறை அரசு மருத்துவமனை, தக்கலை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தயாரிப்பு மையம் அமைக்கப்படும்.

கரோனா தடுப்பூசி, ரெம்டெசிவர் மருந்து மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை அதிக எண்ணிக்கையில் குமரி மாவட்டத்துக்கு ஒதுக்க சுகாதாரத்துறையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கவும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அரசு அறிவித்துள்ளபடி பொதுமக்கள் வெளியில் வராமல் வீடுகளில் இருக்கவேண்டும். நோய் நம்மை தாக்காது என்ற அலட்சியம் வேண்டாம்.

பொதுமக்கள் விழிப்புடன் இருந்து கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக குமரியை மாற்றிட அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT