வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுக்காக கூடுதலாக 36 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் வினாத்தாள்கள் பாதுகாப்புடன் வரவழைத்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த நேரத்திலும் தேர்வு நடத்துவதற்கு தயாராக இருக்கும் நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மையங்கள் மற்றும் மாணவர் எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு தேர்வுத் துறையின் மூலமாக தேர்வுக்கான வினாத்தாள் அனைத்து மாவட்டங்களுக்கும் கடந்த மாதம் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டன.
ஒரு அறையில் 10 மாணவர்கள்
வேலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 69 மையங்களுக்கு தேவையான வினாத்தாள்கள் பெறப்பட்டு கட்டுக்காப்பு மையங் களில் பாதுகாப்பாக வைத்துள் ளனர். புதிய விதிகளின்படி பள்ளிகளில் கூடுதலாக 36 தேர்வு மையங்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
அதன்படி, வேலூர் கொண வட்டம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள மையத்துக்கு காவல் துறை பாதுகாப்புடன் வினாத்தாள் கொண்டு வந்துள்ளனர். கரோனா பரவல் குறைந்தால் ஜூன் மாதத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.