முனைவர் பட்ட மேலாய்வு உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் இயக்குநர் இரா.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
செம்மொழி தமிழ்ப் புலமையை மேம்படுத்துவதற்காக முனைவர் பட்ட மேலாய்வு உதவித் தொகை தகுதியுள்ளோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. முனைவர் பட்ட மேலாய்வு உதவித் தொகையின்கீழ் மாதந்தோறும் ரூ.18 ஆயிரம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இலக்கியம், மொழியியல், மானிடவியல், சமூகவியல், கல்வியியல், தொல்லியல், கல்வெட்டியல், இசையியல், நிகழ்த்துக் கலைகள், வழக்காற் றியல், வரலாறு போன்ற ஏதாவது ஒரு துறையில் கி.பி.6-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 41 செவ்வியல் நூல்கள் குறித்த தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றோர் இந்த உதவித் தொகை பெற ஜூன் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
அதன்படி, விண்ணப்பதாரர்கள் தாங்கள் மேற்கொள்ளவுள்ள ஆய்வு குறித்து மேற்கண்டவற்றில் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு துறை சார்ந்த பாடத்தில் 25 பக்க ஆய்வறிக்கையை விண்ணப்பத்துடன் அனுப்பி வைக்க வேண்டும். ஆய்வறிக்கை மதிப்பீடு செய்யப்பட்டுத் தகுதி யுடையோர் தேர்ந்தெடுக்கப்படுவர். தொடர்ந்து தேர்வு செய்யப்படும் நபர்கள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திலேயே முழுநேரமாக இருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
முன்னதாக, தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர்களோ அல்லது தமிழை ஒரு பாடமாக படிக்காதவர்களோ உதவித் தொகை பெற விண்ணப்பிக்கும்போது தமிழில் பயிற்சி உடையவர்கள் என்பதற் குரிய சான்றிதழை கட்டாயம் இணைத்து அனுப்ப வேண்டும்.
இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளும் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்த்தப்படும். விண்ணப்பப் படிவத்தை https://cict.in/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ‘இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகம், நூறடிச் சாலை, தரமணி, சென்னை -600 113' என்ற முகவரிக்கு ஜூன் 18.ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.