கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சைமையங்களை முழுமையாக ஆய்வு செய்து, தீத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்தார்.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட அரசு தலைமை பொது மருத்துவமனை சாலை, பெருந்துறை முக்கிய சாலை, சம்பத்நகர், நசியனூர் சாலை, மீனாட்சி சுந்தரம் சாலை ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, அரசின் நிலையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் இயங்கி வந்த 7 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கவும், கடைகளுக்கு சீல் வைக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டார். பேருந்தில் முகக்கவசம் அணியாமல் இருந்த நடத்துநருக்கு ஆட்சியர் அபராதம் விதித்தார்.
இதனைத் தொடர்ந்து ஆட்சியர் சி.கதிரவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன், மருத்துவ பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. ஆக்சிஜன் தேவையான மருத்துவமனைக்கு, தொழிற்சாலைகளில் இருந்து சிலிண்டர்களில் நிரப்பப்பட்டு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களை முழுமையாக ஆய்வு செய்து, தீத்தடுப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 50 சதவீதம் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும்.
மாவட்டம் முழுவதும் வட்டார வாரியாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் மூலம் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தை மூடி சீல் வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உடன் இருந்தார்.