கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை அருகே உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 9 பாட்டில் ரெம்டெசிவிர் மருந்து இருந்தது.
காரில் இருந்த இளைஞரை பிடித்து, உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவினர், ஓசூர் சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் கர்நாடகா மாநிலம், பெங்களூரு பேகூர் சாலையில் உள்ள ஏலெனஹள்ளி நிரஞ்சன் ஜெனிசிஸ் அப்பார்ட்மெண்ட் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் பாலாஜி (36) என்பது தெரிந்தது.
மேலும், அவர், பெங்களூருவில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. ஆனந்த் பாலாஜி, சென்னையில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை கர்நாடகாவுக்கு வாங்கிச் சென்று தேவைப்படும் நபர்கள் போன் செய்தால், ஓசூருக்கு வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
அவரை கைது செய்த போலீஸார், 9 பாட்டில் ரெம்டெசிவிர் மருந்து மற்றும் காரை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.