கோபி அருகேயுள்ள குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியதால், உபரிநீர் ஓடையில் வெளியேற்றப்படுகிறது. 
Regional02

குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றம் : கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செய்திப்பிரிவு

நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கன மழையால், குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பி உபரி நீர் ஓடையில் வெளியேற்றப்படுகிறது. இதனால், 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கொங்கர்பாளையத்தில் குண்டேரிப்பள்ளம் அணை அமைந்துள்ளது. குன்றி, விளாங்கோம்பை, கம்பனூர், மல்லியம்மன்துர்க்கம் போன்ற வனப் பகுதிகளில் பெய்யும் மழைநீர், குண்டேரிப்பள்ளம் அணையின் நீராதாரமாக விளங்கி வருகிறது.

கடந்த நான்கு நாட்களாக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் அணையின் நீர் மட்டம் வேகமாக அதிகரித்தது. அணையில் 40 அடி வரை நீரினைத் தேக்கி வைக்க முடியும்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் பெய்த கனமழையால், அணைக்கு விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக நீர் வரத்து அதி கரித்தது. இதனால் அணை நிரம்பி, உபரி நீர் ஓடையில் வெளி யேற்றப்பட்டது.

அணையில் இருந்து 9 ஆயிரம் கன அடி நீர் உபரியாக வெளியேற்றப் பட்டதையடுத்து, ஓடையின் அருகில் இருக்கும் வினோபாநகர், தோப்பூர், கொங்கர்பாளையம், மோதூர், வாணிப்புத்தூர், பள்ளத்தூர், கள்ளியங்காடு உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உபரிநீர் ஓடையில், கால்நடைகளை மேய்க்கவோ, துணிதுவைக்கவோ, மீன் பிடிக்கவோ யாரும் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT