தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை அளிக்கும் அனைத்து தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ம.கோவிந்தராவ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில், தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்து கேட்டறிந்த ஆட்சியர், “கரோனா தொற்று அதிகரித்தால், எதிர்கொள்ளும் வகையில் தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கூட்டத்தில் அவர் பேசியது: தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தேவை ஏற்படும்போது, மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தால், உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்யப்பட்டு, கரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களை தனியார் விடுதிகளில் தனிமைப்படுத்துதல் தொடர்பாக விடுதிகளின் உரிமையாளர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
மேலும், கரோனா பரவலின் தீவிரத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்துடன் தனியார் மருத்துவமனைகளும், அரசு மருத்துவமனைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
பின்னர், இந்திய மருத்துவக் கழகத்தின் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை மைய தலைவர்களுடன், கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஏ.பழனி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜி.ரவிக்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் எஸ்.மருதுதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.