திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 4 பேர் உயிரிழந்ததாக வெளியான தகவல் உண்மை இல்லை என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் மறுப்பு தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக 200 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜனுடன் சிகிச்சை அளிக்க 1.5 கே.எல் (கிலோ லிட்டர்) கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதலாக 1.5 கே.எல். சிலிண்டர் வசதியும் செய்யப்பட்டு உள்ளன.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் சின்னமூக்கனூர், ஆரிப் நகர், தகரக்குப்பம் மற்றும் விஷமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 4 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். நேற்று முன்தினம் இரவு ஆக்சிஜன் பற்றாக்குறையால் 4 பேர் உயிரிழந்துவிட்டதாக அவர்களது உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திலீபன் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் போதுமான அளவுக்கு ஆக்சிஜன் உள்ளது. நேற்று முன்தினம் 2 கே.எல். ஆக்சிஜன் மருத்துவமனைக்கு வந்தது. உயிரிழந்த 4 பேரும் வெவ்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதை சிலர் ஆக்சிஜன் பற்றாக்குறை என வதந்தி பரப்பிவிட்டனர்.
இரவு, பகல் பாராமல் மருத்துவர்களும் செவிலியர்களும் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழப்பு என்ற உண்மைக்கு புறம்பான செய்தி அவர்களை வருத்தமடைய செய்வதாக உள்ளது” என்றார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 4 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் வதந்தி. ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நேரிடுவதாக இருந்தால் அது ஒரே நேரத்தில் நடைபெற்று இருக்கும்.
மேலும், உயிரிழப்பு அதிகமாக இருந்திருக்கும். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள மரணங்கள் வெவ்வேறு நேரங்களில் நிகழ்ந்துள்ளன. எனவே, அவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கவில்லை என்பதே உண்மை” என்றார்