சேலம் மாவட்டத்தில் சிகிச்சையில் இருக்கும் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்க அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் தினசரி 600-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மேட்டூர் மாவட்ட தலைமை மருத்துவமனை, ஆத்தூர், ஓமலூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொற்றினால் பாதிக்கப் பட்டோர் பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வருகிறது.
இதனால், ஆக்சிஜன் தேவையும் அதிகரித் திருப்பதோடு, பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் மட்டுமே ஆக்சிஜன் படுக்கை வசதியுள்ள நிலையில், மேட்டூர், ஆத்தூர் உள்ளிட்ட 4 அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்களை சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் (பொ) செல்வகுமார் கூறும்போது, “அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது, ஆக்சிஜன் தேவையிருப்பதால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கும் சிலிண்டர்களை சேகரித்து தயார் நிலையில் வைத்துள்ளோம். இதுவரை 130 சிலிண்டர்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இவை அவசர தேவை ஏற்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்” என்றார்.