Regional01

அனுமதியின்றி கூடிய ஈரோடு மாட்டுச்சந்தை அதிகாரிகள் எச்சரிக்கையால் கலைந்தது :

செய்திப்பிரிவு

ஈரோட்டில் அனுமதியின்றி கூடிய மாட்டுச்சந்தை, மாநகராட்சி அதிகாரிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து சில மணி நேரங்களில் கலைந்தது.

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி சோதனைச்சாவடி அருகே வாரந்தோறும் வியாழக்கிழமையன்று மாட்டுச்சந்தை நடந்து வருகிறது. சந்தைக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் பங்கேற்று மாடுகளை வாங்கிச் செல்கின்றனர். சராசரியாக சந்தையில் ரூ.3 கோடி வரை வர்த்தகம் நடைபெறும்.

சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் கரோனா பரவலால் கடந்த சில வாரங்களாக வெளிமாநில வியாபாரிகள் வராததால், வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால், கடந்த வாரம் சந்தை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான சந்தை நேற்று கூடியது. கரோனா தாக்கம், இ பாஸ் போன்ற கட்டுப்பாடுகள் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை.

இதுதொடர்பாக மாட்டுச்சந்தை நிர்வாகிகள் கூறும்போது, சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் ஒருவர் கூட வரவில்லை. பொதுவாக சந்தைக்கு 800 மாடுகள் வரை விற்பனைக்கு வரும் நிலையில், பசுமாடு 100, எருமை மாடு 300, கன்று 50 என மொத்தம் 450 மாடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன, என்றனர்.

இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் சந்தை நடக்கும் பகுதிக்குச் சென்று, மாட்டுச்சந்தை நடத்த அனுமதி இல்லை. உடனடியாக கலைக்கவில்லையென்றால் மாடுகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்தனர். இதையடுத்து சந்தையில் இருந்து மாடுகள் வேகமாக வெளியேற்றப்பட்டன. அனுமதியில்லாமல் மாடுகளை கொண்டு வந்த வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT