கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசு பிறப்பித்த புதிய கட்டுப் பாடுகள் நேற்று அமலுக்கு வந்தது. இதையடுத்து, சேலத்தில் விதிமீறிய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டன.
கரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அரசு நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதையடுத்து, பலசரக்கு, மளிகை மற்றும் காய்கறி கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் பகல் 12 மணிவரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சலுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.
சேலம் மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக பகல் 12 மணிக்கு மேல் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால், பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. சில இடங்களில் கடைகள் பாதி ஷெட்டர் திறந்து வைத்து விற்பனை நடைபெற்று வந்தது. இதுபோன்ற இடங்களில் சாலைகளில் வழக்கம்போல மக்கள் நடமாட்டம் இருந்தது.
சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு மேற்பார்வையிட ஐஜி தினகரன் நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாநகர பகுதியில் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார் தலைமையிலான போலீஸாரும், மாவட்ட பகுதியில் எஸ்பி தீபா காணிகர் தலைமையிலான போலீஸார் நேற்று புதிய கட்டுப் பாடுகளை மீறிய கடைகள் மற்றும் பொதுமக்களுக்கு அபராதம் விதித்தும், எச்சரிக்கை செய்தும் நடவடிக்கை எடுத்தனர்.
சேலத்தில் விதிமீறி பகல் 12 மணிக்கு மேல் கடைகளை திறந்து வைத்திருந்த 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதேபோல, சாலையோரக் காய்கறி கடைகள், சிறிய பூக்கடை கள் 12 மணியை கடந்தும் வியா பாரம் செய்தவர்களை போலீஸார், கடையை மூடச் சொல்லி எச்சரித்தனர்.
சாலைகள் வெறிச்சோடின
அமைதியான ஓசூர் சாலைகள்
இதேபோல், தருமபுரி மாவட்டத்திலும் கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. நகரில் முக்கிய சாலைகளான முகம்மது கிளப் சாலை, ஆறுமுக ஆச்சாரி தெரு, கந்தசாமி வாத்தியார் தெரு, சின்னசாமி தெரு, நேதாஜி பை-பாஸ் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இதேபோல் பென்னாகரம், அரூரிலும் பகல் 12 மணிக்கு பிறகு கடைகள் அடைக்கப்பட்டன.