தமிழகத்தில் நேற்று முதல் நண்பகலில் இருந்து முழுஊரடங்கு அமலுக்கு வந்ததையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் காலை முதலே காய்கறி,மளிகை கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கையின் முக்கிய அம்சமான சமூக இடைவெளி கேள்விக்குறியானது.
கரோனா 2-வது அலை தடுப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்தும் வகையில் தமிழகத்தில் நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி மளிகை, காய்கறி கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை காய்கறி கடை, டீக்கடை, மளிகை கடைகள், மருந்தகங்களில் காலை முதலே மக்கள்கூட்டம் கூட்டமாக வந்து தங்களுக்கு தேவையான பொருட்களைவாங்கிச்சென்றனர். மாநகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் கரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்க மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால், கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைவு என்பதால் அறிவுரையை பொருட்படுத் தாமல் பொருட்களை வாங்குவ திலேயே மக்கள் கவனம் செலுத்தி னர்.
ஏற்கெனவே மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள்அதிகரிக்கும் நிலையில், மக்கள்சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொருட்கள் வாங்க குவிந்தது மேலும் தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் சூழலை உருவாக்கியது.
நண்பகல் 12 மணிக்கு மளிகை,காய்கறி கடைகள் அடைக்கப்பட்டன. ஹோட்டல்களில் விதிமுறைகளுக்கு உட்பட்டு உணவு பொருட்கள் பார்சலில் விற்பனை செய்யப்பட்டது. மதியம் 12 மணிக்குமேல் பரபரப்பு ஓய்ந்து முக்கியவீதிகள் வெறிச்சோடின. பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மாவட்டம் முழுவதும் மதியத்துக்கு பின்னர் மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வங்கிகள் இயங்கின. அரசு மற்றும்தனியார் பேருந்துகள் , ஆட்டோக்கள், வாடகை கார்கள் இயங்கின.
இதுபோல், கோவில்பட்டி, திருச்செந்தூர், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம், உடன்குடி, வைகுண்டம் உள்ளிட்ட இடங்களில் நண்பகல் 12 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டதால், சாலைகள் வெறிச்சோடின. அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் ஒலி பெருக்கியில் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நாகர்கோவில்
3 கடைகளுக்கு அபராதம்