திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில், கடைகளில் காலையிலேயே மக்கள் கூட்டமாக நின்று பொருட்களை வாங்கினர்.
தமிழகத்தில் கரோனா பரவலைகட்டுப்படுத்த இரவு 10 மணி முதல்அதிகாலை 4 மணிவரை இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில்உள்ளது. கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துவருவதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அவை நேற்றுமுதல் அமலுக்கு வந்தன. அதன்படி காய்கறி, மளிகை கடைகள் பகல் 12 மணிவரை செயல்பட்டன. மற்ற கடைகள் செயல்படவில்லை.
பகல் 12 மணிக்குமேல் கடைகள் திறக்கப்படாது என்பதால், காலையிலேயே காய்கறி மற்றும் மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பொருட்களை வாங்கிச் சென்றனர். பலரும் ஒரு மாதத்துக்கு தேவையான மளிகைப்பொருட்களையும், ஒருவாரத்துக்கு வேண்டிய காய்கறிகளையும் வாங்கிச் சென்றனர். பாளையங்கோட்டை சந்தையில் கூட்டம் அதிமிருந்தது. ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் காலையிலேயே அணிவகுத்தனர். முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் இருந்தது.
சந்தைகளில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. பகல் 12 மணிக்குமேல் கடைகள் அடைக்கப்பட்டன. இதை தொடர்ந்து சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்தது.
பேருந்துகளில் 50 சதவீதம் பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் பயணிகள் எண்ணிக்கை பேருந்துகளில் குறைவாகவே இருந்தது. திருநெல்வேலி மாநகர பேருந்துகளில் 10 பேருக்கும் குறைவானவர்களே பயணித்தனர். இதுபோல், நாகர்கோவில், திருச்செந்தூர், மதுரை, தூத்துக்குடி, பாபநாசம்,தென்காசி, சங்கரன்கோவில் வழித்தடங்களில் திருநெல்வேலிக்கு இயக்கப்பட்ட பேருந்துகளிலும் பயணிகள் மிகக்குறைவாகவே பயணித்தனர். எனினும், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தேவையைப் பொறுத்து பேருந்துகள் தொடர்ந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்டன.
வெறிச்சோடிய சாலைகள்
திருநெல்வேலியில் பெரிய ஹோட்டல்களில் மட்டுமே பார்சல்மூலம் உணவு விநியோகிக்கப்பட்டது. வீடுகளுக்கு பார்சல் சேவைவழங்குவோரும் மும்முரமாக செயல்பட்டனர். மற்றபடி வியாபாரம் குறைந்ததால் சிறிய மெஸ்கள் பலவும் மூடப்பட்டிருந்தன.
பகல் 12 மணிக்குப் பிறகு முழு அடைப்பு போலவே, நகரங்கள் காட்சியளித்தன.