சேலம் வஉசி மார்க்கெட்டில் நடைபெற்ற கரோனா பரிசோதனை முகாமை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். 
Regional01

வியாபாரிகளுக்கு கரோனா தொற்று - சேலம் வஉசி மார்க்கெட் இன்று முதல் தற்காலிகமாக மூடல் : மாநகராட்சி ஆணையர் தகவல்

செய்திப்பிரிவு

சேலம் வஉசி மார்க்கெட்டில் வியாபாரிகள் 4 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து, வஉசி மார்க்கெட் இன்று (6-ம் தேதி) முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் சார்பில் சேலம் போஸ் மைதானத்தில் தற்காலிக வஉசி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில், பூ வணிகம் செய்யும் வியாபாரிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, வஉசி மார்க்கெட்டில் முழு அளவில் சுகாதாரப்பணிகள் மற்றும் கரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மார்க்கெட்டில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வியாபாரிகள் அனைவருக்கும் சளி தடவல் பரிசோதனை சிறப்பு முகாம் நடந்தது.

முகாமில், இதுவரை 113 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

வஉசி மார்க்கெட்டில் நடைபெற்று வரும் பரிசோதனை முகாம் மற்றும் மார்க்கெட் வளாகத்தில் நடைபெற்று வரும் சுகாதாரப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறியதாவது:

பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தடை இன்றி கிடைத்திடும் வகையிலும், பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் உழவர் சந்தைகள் மற்றும் நாளங்காடிகள் ஆகியவற்றின் வாயிலாக கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக மாற்று இடங்களை தேர்வு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்களின் நலன் கருதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வஉசி மார்க்கெட்டில், தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் மார்க்கெட் இன்றுமுதல் (6-ம் தேதி) தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பொது நலன் கருதி கரோனா தொற்று நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும், வியாபாரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, சேலம் பொன்னம்மாபேட்டை தில்லை நகர் பகுதியில் உள்ள ஐஐஎச்டி வளாகத்தில் ஆண்கள் விடுதியில் கரோனா தற்காலிக சிகிச்சை மையம் அமைக்கும் பணிகளை ஆணையர் பார்வையிட்டார். ஆய்வின்போது, மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையர்கள் சண்முகவடிவேல், மருதபாபு, ராம்மோகன், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி வருவாய் அலுவலர் பார்த்தசாரதி மற்றும் சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT