தமிழக அரசு உத்தரவுப்படி இன்று (6-ம் தேதி) முதல் வரும் 20-ம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என சேலம் ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று பரவலை தடுப்பது தொடர்பாக சேலம் மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் காணொலி கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் சேலம் ஆட்சியர் ராமன் பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்க ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில் கரோனா பரவலை தடுக்க இன்று (6-ம் தேதி) காலை 4 மணி முதல் வரும் 20-ம் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
தற்போது, வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை.
இவை தவிர தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில், ஒரே நேரத்தில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம்போல எந்தத் தடையுமின்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்கப்பட வேண்டும். தேநீர் கடைகள் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை செய்யப்படுகிறது.
திரையரங்குகள் செயல்படாது. ஏற்கெனவே, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், 25 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், மீன் மார்க்கெட், மீன் கடைகள், இறைச்சிக் கடைகள் செயல்பட அனுமதி இல்லை. இதர நாட்களில் காலை 6 மணி முதல் 12 வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.