கரோனா தொற்றை ஒழிக்க புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்படுத்தப்படுவதால், மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, தூத்துக்குடி எஸ்பி வேண்டு கோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் 38-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி 3-ம் மைல் சுற்றுவட்டார வியாபாரிகள் சங்கம் சார்பாக கரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பங்கேற்று பேசியதாவது:
கரோனா தொற்று பரவுவதை தடுக்க தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி புதிய கட்டுப்பாடுகள் இன்று( ஏப்.6) அதிகாலை 4 மணி முதல்20-ம் தேதி அதிகாலை 4 மணி வரை அமல்படுத்தபட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் தொடர்ந்து அமலில் இருக்கும்.
பலசரக்கு மளிகை மற்றும் காய்கறி கடைகள் தவிர பிற கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பலசரக்கு, மளிகை மற்றும் காய்கறிகடைகள் திங்கள் முதல் சனி வரை மதியம்12 மணி வரை மட்டும் குளிர்சாதன வசதியின்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளான பால்,மருத்துவ சேவைகள் போன்றவற்றுக்கு எந்த தடையும் இல்லை. தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை அமல்படுத்த இன்று முதல் மாவட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். கரோனா வைரஸை முற்றிலும் ஒழிக்க கட்டுப்பாடுகளை கடைபிடித்து மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் எடுத்துக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் நம் உயிரைகாப்பாற்றிக் கொள்ளலாம் என்றார் எஸ்பி.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை 3-ம் மைல் சுற்றுவட்டார வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயபாலன், துணைத் தலைவர் பெத்துபாண்டியன், செயலாளர்கள் செல்லத்துரை, மோகன்ராம், பொருளாளர் பொன்னம்பலம் ஆகியோர் செய்திருந்தனர்.