Regional03

61 சதவீத படுக்கைகளில் கரோனா நோயாளிகள் : ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை: தூத்துக்குடி ஆட்சியர்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அறிக்கை: தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக 700 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் தற்போது 458 படுக்கைகளில் நோயாளிகள் உள்ளனர். இது 65 சதவீதம். மாவட்டத்தில் உள்ள பிற அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு 455 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் தற்போது 247 படுக்கைகளில் நோயாளிகள் உள்ளனர். இது 54 சதவீதம். தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு 165 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் 63 சதவீத படுக்கைகளில் நோயாளிகள் உள்ளனர்.

இதேபோல் கரோனா பாதுகாப்பு மையங்களில் மொத்தம் 545 படுக்கைகள் உள்ளன. இதில் தற்போது 325 படுக்கைகளில் மட்டும் நோயாளிகள் உள்ளனர். இது 60 சதவீதம். மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு மொத்தம் 1,961 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் தற்போது 1,195 படுக்கைகளில் நோயாளிகள் உள்ளனர். இது 61 சதவீதம்.

மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏதும் இல்லை. நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி திரவ ஆக்சிஜன் 6.38 கேஎல்டி இருப்பில் உள்ளது. மேலும், பி வகை ஆக்சிஜன் சிலிண்டர்கள் 270-ம், டி வகை ஆக்சிஜன் சிலிண்டர்கள் 290-ம் இருப்பில் உள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT