சேலம் உருக்காலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சேலம் உருக்காலை நிறுவனத்தில் மருத்துவ பயன்பாட்டுக்காக ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை சேலம் ஆட்சியர் ராமன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:
கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற தேவையான படுக்கை வசதிகள், உயிர் காக்கும் கருவிகள் மற்றும் ஆக்சிஜன்தேவையான அளவு தயார் நிலையில் உள்ளன.
சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 35 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சேமிப்பு கலன் ஏற்கெனவே அமைக்கப்பட்டு, கரோனா நோயாளிகளுக்கு வழங்க தேவையான அளவு ஆக்ஸிஜன் இருப்பு உள்ளது.
தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க அரசு அனுமதி அளித்துள்ள தனியார் மருத்துவமனைகளிலும் தேவையான அனைத்து வசதிகளையும் முழுமையாக ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் ஆக்சிஜன் உடனுக்குடன் வழங்க தேவையான அளவு இருப்பில் உள்ளது.
இத்தேவைக்காக சேலம் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் மருத்துவ பயன்பாட்டுக்கான 14 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் முழுவதும் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகிறது.
மேலும், தனியார் மருத்துவமனைகளின் அவசர தேவைக்காக அண்டை மாநிலங்களில் இருந்தும் 25 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் பெறப்பட்டு மருத்துவ மனைகளுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
ஆக்சிஜன் கூடுதல் தேவைக்காக சேலம் உருக்காலையில் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கூடுதல் தேவைகளுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், சேலம் கோட்டாட்சியர் மாறன், உருக்காலை நிறுவன அலுவலர்கள் உடனிருந்தனர்.