நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் கா.மெகராஜ் பேசினார். 
Regional01

கரோனா தொற்று பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட - கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறதா என்பதை அரசு அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் : நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

அரசு அறிவுறுத்தியுள்ள கரோனா நோய்த்தொற்று தடுப்பு நட வடிக்கைகளை பின்பற்றுவது தொடர்பாக அரசுத்துறை அலுவலர் கள் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதாரத்துறை, வரு வாய்த் துறை, ஊரகவளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, காவல்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:

தமிழக அரசு கரோனா தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.

பொதுமக்களின் நலனுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகளை தங்கள் பகுதியில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் பின்பற்றப்படுகிறதா என்பதை அரசு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு சோதனை செய்ய வேண்டும்.

கரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் வெளியில் வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கிருமி நாசினி மற்றும் சோப் பயன்படுத்தி அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்பட அரசு அறிவுறுத்தியுள்ள நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் தவறாது பின்பற்ற அரசுத்துறை அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் தொடர்ந்து வலியுறுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (கூடுதல்) எம்.ரவிக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர்கள் மு.கோட்டைக்குமார், ப.மணிராஜ், மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் த.கா.சித்ரா, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் எஸ்.சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT