சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிட வளாகத்தில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் அலுவலக சாலையோரம் பயன்படுத்தப்பட்ட கையுறை மற்றும் முகக் கவசம் வீசப்பட்டது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடத்தில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் அலுவலகம் உள்ளது. இங்கிருந்து மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கரோனா தடுப்பூசி, கையுறை, முகக் கவம், கிருமிநாசினி, மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், இங்கு கரோனா தொற்று பரிசோதனை மையமும் இயங்கி வருகிறது. தினமும் பலர் இங்கு வந்து கரோனா தொற்று பரிசோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகம் உள்ள சாலையோரம் பயன்படுத்தப்பட்ட முகக் கவம், கையுறைகள் பாதுகாப்பற்ற முறையில் வீசப்பட்டிருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “மாநகராட்சி நிர்வாகம் வணிக பகுதிகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் சென்று கரோனா தொற்று விதிமுறைகள் பின்பற்றுவதை ஆய்வு செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.
ஆனால், அரசு சார்ந்த சுகாதாரத் துறையில் கரோனா தொற்று விதிமுறை மீறி, முறையாக அப்புறப்படுத்த வேண்டிய முகக்கவசம், கையுறைகளை சாலைகளில் வீசி சென்றுள்ளதை கண்டு கொள்ளவில்லை. எனவே, இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, கரோனா தொற்று விதிமுறைகளை அரசு துறைகளில் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்” என்றனர்.