கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக – கர்நாடக எல்லையில் உள்ள ராமாபுரம் சாலை தடுப்புகளால் அடைக்கப்பட்டுள்ளது. 
Regional01

சம்ராஜ் நகரில் கரோனா பரவல் அதிகரிப்பால் - தமிழக-கர்நாடக எல்லையில் சாலைகள் அடைப்பு :

செய்திப்பிரிவு

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தாளவாடி - சாம்ராஜ் நகர் இடையேயான சாலைகள் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டுள்ளன.

தமிழக- கர்நாடக எல்லையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி அமைந்துள்ளது. தாளவாடியில் வசிப்போர் அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும், மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காகவும் 61 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதையில் பயணித்து, சத்தியமங்கலம் வர வேண்டியுள்ளது.

இதன் காரணமாக 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகருக்கு சென்று தங்கள் தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர். அதேபோல், சாம்ராஜ் நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கர்நாடக கிராமங்களைச் சேர்ந்தோர் பல்வேறு பணிகளுக்காக தாளவாடி வந்து செல்கின்றனர்.

கடந்த சில நாட்களாக சாம்ராஜ் நகரில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அங்குள்ள மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள் நிரம்பி வருகின்றனர். இரு நாட்களுக்கு முன்னர், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கரோனாவால் பாதிக்கப்பட்ட 24 பேர் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவமும் நடந்தது.

தற்போது, கர்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், சாம்ராஜ் நகர் மற்றும் கர்நாடக பகுதிகளில் இருந்து, தாளவாடிக்கு ஏராளமானோர் வந்து செல்வதாக புகார் எழுந்தது. இதனால் தாளவாடி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தமிழக – கர்நாடகா எல்லையில் உள்ள ராமாபுரம், பிசில்வாடி, அருள்வாடி, எத்திகட்டை, கும்டாபுரம் சாலையை தகரசீட் மற்றும் கேட் அமைத்து அதிகாரிகள் பூட்டினர். இரு மாநிலங்களை இணைக்கும் முக்கிய பாதையான பாரதிபுரம் சாலையில் மட்டும் சோதனைச்சாவடி அமைத்து அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றிவரும் வாகனங்கள் மற்றும் இ-பாஸ் உள்ள வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT