சேலத்தில் மருத்துவக் கழிவுகளை முறையாக ஒப்படைக்காத தனியார் மருத்துவமனைக்கு ரூ.25,000 அபராதமும், கரோனா விதிகளை பின்பற்றாத 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.
சேலம் மாநகராட்சி பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி உதவி ஆணையர் சரவணன் தலைமையில் செரிரோடு பகுதியில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அரசின் தடையை மீறி பல்பொருள் அங்காடியை திறந்து வைத்து, விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, விற்பனை நிலையத்துக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டு, மூடி சீல் வைக்கப்பட்டது.
மேலும், நடேசன் பண்டாரம் காலனி பகுதியில் தனியார் பல்பொருள் விற்பனை நிலையம், தனியார் சிற்றுண்டி நிலையம், மணக்காடு இட்டேரி சாலையில் உள்ள பல்பொருள் விற்பனை நிலையத்தில் கரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காததால் தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.
சூரமங்கலம் உதவி ஆணையர்கள் ராம்மோகன், (வருவாய்) சாந்தி தலைமையிலான அலுவலர்கள் மெய்யனூர் பிரதான சாலை பகுதியில் மேற்கொண்ட ஆய்வின்போது, விதிமுறைகளுக்கு முரணாக விற்பனை செய்த தனியார் கைப்பேசி விற்பனை நிலையத் துக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டு விற்பனை நிலையம் மூடி சீல் வைக்கப்பட்டது.
அம்மாப்பேட்டை உதவி ஆணையர் சண்முகவடிவேல் தலைமையில் அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வில், கரோனா விதிமுறைகளை முறையாக அமல்படுத்தாத வங்கிக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது. முதல் அக்ரஹாரத்தில் உள்ள இரு விற்பனை நிலையத்துக்கும், பஜார் சாலையில் ஒரு ஜவுளி கடைக்கும் தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டு, கடைகள் மூடி சீல்வைக்கப்பட்டன.
கொண்டலாம்பட்டி உதவி ஆணையர் ரமேஷ்பாபு தலைமையில் சுகாதார அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்ட போது, சீலநாயக்கன்பட்டி, சங்ககிரி மெயின்ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை, மருத்துவக் கழிவுகளை சேகரம் செய்ய நியமிக்கப்பட்டுள்ள நிறுவனத்திடம் மருத்துவக் கழிவுகளை முறையாக ஓப்படைக்காமல் பிற குப்பை கழிவுகளுடன் மாநகராட்சி வாகனத்தில் ஏற்றுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு ரூ.25,000 அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இரு நாட்களாக மேற்கொண்ட ஆய்வு மூலம் முகக்கவசம் அணியாத 121 தனி நபர்களுக்கு தலா ரூ.200-ம், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 38 சிறு வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ.500-ம், 13 பெரும் நிறுவனங்களுக்கு தலா ரூ.5,000 அபராதம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.