Regional03

தந்தை திருநாவுக்கரசர் எம்.பி.யின் ஆலோசனையுடன் - மக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றுவேன் : அறந்தாங்கி தொகுதியில் வெற்றி பெற்ற ராமச்சந்திரன் உறுதி

செய்திப்பிரிவு

தந்தையின் ஆலோசனையுடன் மக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றுவேன் என அறந்தாங்கி தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வாகியுள்ள திருநாவுக்கரசர் எம்.பியின் மகன் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

திருச்சி மக்களவைத் தொகுதி எம்.பியாக இருப்பவர் சு.திருநாவுக்கரசர். இவர் அறந்தாங்கி தொகுதியில் அதிமுக சார்பில் 4 முறையும், அதிமுக ஜெ. அணி சார்பில் ஒரு முறையும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஒரு முறை போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அதேபோல, 1998 மக்களவைத் தேர்தலில் புதுக்கோட்டையில் தனிக்கட்சி தொடங்கி காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1999-ல் இதே தொகுதியில் திமுக-பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மேலும், தொகுதி மறுசீரமைப்புக்குப் பின், 2009-ல் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பிலும், 2014 தேர்தலில் காங்கிரஸ் சார்பிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பின், 2019-ல் திருச்சி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மேலும், இவர் தனது மகன் ராமச்சந்திரனை 2016-ல் அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் களம் இறக்கினார். ஆனால், அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்நிலையில், இந்தத் தேர்தலில் மீண்டும் அறந்தாங்கி தொகுதியில் ராமச்சந்திரனை களம் இறக்கிய திருநாவுக்கரசர், மகனை எப்படியாவது வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக தொகுதியிலேயே தங்கியிருந்து தீவிர களப்பணியாற்றினார்.

இதையடுத்து, மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ராமச்சந்திரன் வெற்றி பெற்றார்.

முடிவு அறிவிக்க, நள்ளிரவான நிலையிலும்கூட தந்தை வரும் வரை காத்திருந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்த் மோகனிடம் இருந்து இருவரும் இணைந்து வெற்றிச் சான்றிதழை பெற்று சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசியல் வரவாற்றில் ஒரே குடும்பத்தில் தந்தை எம்.பியாகவும், மகன் எம்எல்ஏவாகவும் இருப்பது இதுவே முதல் முறையாகும்.

இது குறித்து ராமச்சந்திரன், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: தந்தை பல்வேறு பொறுப்புகளில் இருந்து பல்வேறு நலத்திட்டங்களை செய்ததால் மக்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.

இதேபோல, கடந்த தேர்தலில் நான் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தொகுதி மக்களின் அனைத்து நிகழ்வுகளில் கலந்துகொண்டு வந்தேன்.

தற்போது வெற்றி பெற்றுள்ள நான், தந்தையைப் போன்று மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடிப்பதற்கு அவருடைய ஆலோசனையுடன் மக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றுவேன் என்றார்.

SCROLL FOR NEXT