Regional01

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் : தென்காசி மாவட்ட ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று தடுப்புநடவடிக்கைகள் மிகவும் துரிதமாகவும், சிறப்பாகவும் நடைபெற்று வருகிறது.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் பங்காக சித்த மருந்தான கபசுர குடிநீர் வழங்கும் முகாம் அனைத்து இடங்களிலும் நடைபெற்று வருகிறது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நடக்கும் காய்ச்சல் முகாம்களில் கரோனா பரிசோதனை எடுக்கும் அனை வருக்கும் கபசுர குடிநீர் தொடர்ந்து 5 நாட்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ள கரோனா நோயாளிகளுக்கு சித்த, ஆயுஷ் மருந்துகள், சிறப்பு யோகா மருத்துவ முறைகள், உணவு முறைகள் பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோய் எதிர்ப்புசக்திக்கு கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உள்ள கரோனா நோயாளிகளுக்கும், சித்த, ஆயுஷ் மருந்துகளும், கபசுரகுடிநீரும், சிறப்பு யோகாசன முறைகளும் வழங்கப்படுகிறது. மன உளைச்சலை தடுக்கும் பொருட்டு சிறப்பு பயிற்சிகள், கவுன்சலிங் அளிக்கப்படுகிறது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களான அரசு அலுவலகங்கள், காவல் நிலையம், நீதிமன்றங்கள், மார்க்கெட், கடைத்தெரு, பேருந்துநிலையம், ரேஷன் கடை, உணவகம், டீக்கடை, விற்பனையாளர்கள், போக்குவரத்துத்துறை, ஆட்டோ, டாக்ஸி வாகன ஓட்டுநர்கள் இவர்களுக்கு பஞ்சாயத்துஉதவியுடன் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.

செக்போஸ்ட்களில் லாரி மற்றும் வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள், களப்பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது என்று ஆட்சியர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT