உடுமலையில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணிடம் அரிவாள் முனையில் நகையை கொள்ளையடித்து தப்பிய நபரை பொதுமக்கள் சுற்றி வளைத்தனர். இதைத் தடுக்க முயன்ற பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த வேலன் நகரில் வசிப்பவர் தண்டபாணி (68). கட்டுமான ஒப்பந்ததாரர். இவரது மனைவி கஸ்தூரி (65). நேற்று காலை கூரியர் தபால் வந்திருப்பதாகக் கூறி மர்ம நபர் வந்துள்ளார். அப்போது கஸ்தூரி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். தபால் பெற்றதற்காக கையெழுத்திடுவதற்கு பேனா எடுத்து வர வீட்டுக்குள் சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் இரும்பு ராடு ஆகியவற்றை காட்டி மிரட்டி கஸ்தூரி அணிந்திருந்த தங்க தாலிக்கொடி, மோதிரம் ஆகியவற்றை பறித்துவிட்டு தப்ப முயன்றார். அப்போது பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் திருப்பூர் மாவட்ட பாஜக பிரச்சார அணி தலைவர் சின்னராஜ் (61) சென்றுள்ளார். மர்ம நபரை அவர் பிடிக்க முற்பட்டபோது, அரிவாளால் முகம், கை ஆகியவற்றில் வெட்டு விழுந்தது. இதனால் அவர் தடுமாறி கீழே விழுந்தார். அக்கம் பக்கம் இருந்த பெண்கள் வந்தபோது, அவர்கள் மீது இரும்பு ராடை தூக்கி போட்டதில் பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்ற மர்ம நபரை பாஜக பிரமுகர் மீண்டும் பிடித்துள்ளார். அவரிடமிருந்து தப்பியோடிய மர்ம நபரை, பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். முதலுதவிக்கு அரசு மருத்துவமனையில் சின்னராஜ் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விசாரணையில், உடுமலையில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தங்கவேலின் மகன் உதயகுமார் (33).திருமணமானவர். இவர் எம்பிஏ பட்டதாரி. கட்டுமான ஒப்பந்ததாரரான இவர், கடந்த சில நாட்களாக வீடு கட்டுவது தொடர்பாக பேசியுள்ளார்.
நேற்று தண்டபாணிக்கு தொடர்புகொண்டு அவர் வீட்டில் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது. கொள்ளையடித்த தங்க நகை மீட்கப்பட்டது. உடுமலை குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து, உதயகுமாரை கைது செய்தனர்.
இவ்வாறு போலீஸார் கூறினர்.