சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே, கரோனா சிகிச்சை பெற மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகளுடன் சிறப்பு மருத்துவமனைகளை அமைக்க வேண்டும் என்று கடந்த ஓர் ஆண்டாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கரோனா பாதித்த மாற்றுத் திறனாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவமனைகளை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை மாற்றுத் திறனாளிகள் நலத்துறை தொடங்கியது. இதற்காக, சிறப்பு பள்ளிகளிடம் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் முறையிட்டனர்.
ஆனால், சிறப்பு பள்ளிகள் முன்வராத காரணத்தால் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவமனையை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கரோனாவால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக மருத்துவமனை அமைக்க சிறப்பு பள்ளிகளைக் கேட்டோம். தற்போது கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்தால் பள்ளிகளை திறக்கும்போது படிக்க வரும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் கரோனாவால் பாதிக்கக்கூடும் என்று கூறி தயக்கம் காட்டி வருகின்றனர்.
இருப்பினும், நாங்கள் மீண்டும் சிறப்பு பள்ளிகளிடம் முறையிட்டுள்ளோம். இதுமட்டுமின்றி, நீண்ட அறை, கூட்ட அரங்கு உள்ள நிறுவனங்கள், விடுதிகள் முன்வரவும் அழைப்பு விடுத்துள்ளோம். இவர்கள் முன்வரும் பட்சத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.