கரோனா அச்சத்தால் தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா விரைவு ரயில்களில் பயணிகள் வருகை குறைவாக இருக்கிறது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரோனா பரவலை தடுக்க வழக்கமான பயணிகள் விரைவுரயில்கள் இன்னும் இயக்கப்படவில்லை. இருப்பினும், பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு ரயில்கள் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், கடந்த மாதம் 24-ம் தேதி முதல் தாம்பரம் -நாகர்கோவில் இடையே அந்த்யோதயா முன்பதிவு இல்லாத ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கரோனாவுக்கு முன்பெல்லாம் இதுபோன்ற விடுமுறை நாட்களில் தென்மாவட்ட விரைவு ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். அதுபோல், தாம்பரம் - நாகர்கோவில் இடையேயான முன்பதிவு இல்லாத அந்த்யோதயா விரைவு ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், தற்போதுள்ள கரோனாஅச்சத்தால் மக்கள் வெளியூர் பயணத்தை தவிர்த்து வருகின்றனர். இதனால், அந்த்யோதயா ரயில்களில் பயணிகள் வருகை குறைவாக இருக்கிறது.