ஈரோடு கிழக்குத் தொகுதியில் வெற்றிபெற்ற பெரியாரின் கொள்ளுப்பேரனும், காங்கிரஸ் வேட்பாளருமான திருமகன் ஈவெராவிற்கு, திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் த.சண்முகம் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். 
Regional01

59 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரோட்டில் வெற்றிபெற்ற காங்கிரஸ் : சட்டப்பேரவைக்குள் செல்கிறார் பெரியாரின் கொள்ளுப்பேரன்

செய்திப்பிரிவு

ஈரோட்டில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், பெரியாரின் கொள்ளுப்பேரனான திருமகன் ஈவெரா சட்டப்பேரவைக்கு செல்வதால் காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திராவிடர் கழக நிறுவனர் பெரியார் ஈ.வெ.ராமசாமியின் அண்ணன் கிருஷ்ணசாமியின் மகன் ஈ.வெ.கி.சம்பத். திமுக, காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கட்சி என அரசியல் பயணத்தைத் தொடர்ந்த சம்பத்தின் மகன் அதிரடிக்கு பெயர் பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், மத்திய அமைச்சர் பதவிகளை வகித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த மக்களவைத் தேர்தலில், ஈரோடு தொகுதி கூட்டணிக் கட்சியான மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டதால், தேனியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

சென்னையில் வசித்தாலும், யார் கட்சித் தலைவராக இருந்தாலும், ஈரோடு மாநகர், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட நிர்வாகப் பதவிகளை ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது ஆதரவாளர்களுக்கு வாங்கித் தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்குத்தொகுதி காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டு, ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா வேட்பாளராக அதிரடியாக களமிறக்கப்பட்டார்.

கடந்த 1962-ல் ஈரோடு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன் பிறகு கடந்த 1980-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டது. அப்போது காங்கிரஸ் வெற்றிபெறவில்லை. அதன்பின்னர் 41 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோட்டில் காங்கிரஸ் தற்போது களமிறங்கியது.

காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக அதிமுக கூட்டணியில் தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா 8904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தொகுதியின் வெற்றியைத் தீர்மானிக்கும் வகையில் இருந்த சிறுபான்மையின வாக்குகள், முழுமையாக காங்கிரஸ் வேட் பாளருக்கு சென்றதே தனது தோல்விக்கு காரணமாக அமைந்தது என தமாகா வேட்பாளர் எம்.யுவராஜா தெரிவித்துள்ளார். 59 ஆண்டுகளுக்குப்பிறகு ஈரோட்டில் காங்கிரஸ் வெற்றி பெறுவதுடன், பெரியாரின் கொள்ளுப்பேரனான திருமகன் ஈவெரா சட்டப்பேரவைக்கு செல்வது காங்கிரஸ் மற்றும் திராவிட இயக்க பற்றாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT