அரசின் நிதியுதவி பெறும் கூட்டுறவு சங்க ஊழியரை, அரசு ஊழியராக கருத வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மேட்டுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அய்யாத்துரை என்பவர் தனது 39.400 கிராம் தங்க நகையை அடமானம் வைத்து ரூ.60 ஆயிரம் விவசாய நகைக் கடன் பெற்றிருந்தார். தமிழக அரசு விவசாய கடன்களை ரத்து செய்தபோது, விவசாய நகைக்கடனும் ரத்து செய்யப்பட்டு, நகைகளை திருப்பி கொடுக்க அரசு உத்தரவிட்டது.
அதன்படி நகையை கேட்க சென்ற அய்யாத்துரையிடம் சங்கச் செயலாளர் சுப்பிரமணியம் என்பவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி சுப்பிரமணியம் தாக்கல் செய்த மனுவை திருநெல்வேலி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்பிரமணியம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது கூட்டுறவு சங்க ஊழியரை அரசு ஊழியராகக் கருத முடியாது என வாதிடப்பட்டது. மேலும் அரசின் நிதியுதவி பெறாத கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு ஊழியர்கள் அல்ல என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் மேற்கோள் காட்டப்பட்டது.
இதையடுத்து அந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகக்கூறி, இந்த வழக்கு, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதிகள் எம்.சத்தியநராயணன், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய முழு அமர்வு, தனியார் நிறுவன ஊழியர்களின் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களைத்தான் அரசு ஊழியர்களாக கருத முடியாது என கடந்தாண்டு மார்ச் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அரசு நிதியுதவி பெறும் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு ஊழியர்களாகவே கருதப்படுவர். எனவே இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி சுப்பிரமணியம் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை சம்பந்தப்பட்ட நீதிபதி முன்பாக பட்டியலிட அறிவுறுத்தியுள்ளனர்.