Regional03

வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் - குடோனில் வைக்கப்பட்ட மின்னணு இயந்திரங்கள் : தூத்துக்குடி ஆட்சியர் ஆய்வு

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் கருவிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடோனுக்கு கொண்டு வந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் ரூ.3.35 கோடி மதிப்பில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர குடோன் அமைக்கப்பட்டது. தரைத்தளம் 5,200 சதுர அடியிலும், முதல் தளம் 5,090 சதுர அடியிலும் என, மொத்தம் 10,180 சதுர அடி பரப்பில் லிப்ட் மற்றும் லாக்கர் வசதியுடன் இந்த குடோன் அமைக்கப்பட்டுள்ளது. குடோனை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேற்று திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட 2,100 கட்டுப்பாட்டு கருவிகள், 3,549 வாக்குச்சீட்டு கருவிகள், 2,121 விவிபாட் கருவிகள் வாக்கு எண்ணிக்கை முடிந்ததை தொடர்ந்து, நேற்று புதிய குடோனுக்கு கொண்டுவரப்பட்டன.

ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கென தனியாக ஒதுக்கப்பட்ட அறைகளில் அவை வைக்கப்பட்டு சீல் செய்யப்பட்டன. மேலும் அந்த அறைகள் இரும்பு கதவு (லாக்கர்) மூலம் மூடப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சீல் செய்யப்படுவதை, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT