சேலம் பொன்னம்மாபேட்டை தில்லைநகரில், ஐஐஎச்டி வளாகத்தில் மாநகராட்சி சார்பில் 200 படுக்கை வசதிகளுடன் கரோனா தற்காலிக சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது.
சேலம் மணியனூரில் உள்ள சேலம் அரசு சட்டக்கல்லூரியில் 128 படுக்கை வசதிகளுடனும், கோரிமேடு அரசினர் மகளிர் கல்லூரியில் 100 படுக்கை வசதிகளுடனும், தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கத்தில் 227 படுக்கை வசதிகளுடனும் கரோனா தற்காலிக சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களில் தற்போது மொத்தம் 212 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் பொன்னம்மாபேட்டை தில்லை நகர் ஐஐஎச்டி வளாகத்தில் உள்ள ஆண்கள் விடுதியில் கரோனா தற்காலிக சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:
கரோனா தொற்று தற்போது சற்று அதிகரித்து வரும் நிலையில், சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கூடுதலாக தற்காலிக சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஐஐஎச்டி வளாகத்தில் உள்ள ஆண்கள் விடுதியின் இரு கட்டிடங்களில் 200 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா தற்காலிக சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையர் சண்முக வடிவேல், உதவி பொறியாளர் ஆனந்தி, சுகாதார அலுவலர் மாணிக்கவாசகம், சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
ரூ.2.03 லட்சம் அபராதம்
அம்மாப்பேட்டை உதவி ஆணையர் சண்முகவடிவேல் தலைமையில் நடந்த ஆய்வின்போது, விதிமுறைகளை மீறி செயல்பட்ட அம்மாப்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள தனியார் மால் நிறுவனம், தேர்வீதியில் உள்ள ஜவுளி விற்பனை நிலையம், முதல் அக்ரஹாரத்தில் உள்ள 3 தனியார் ஜவுளி விற்பனை நிலையங்கள் ஆகியவற்றுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, மூடப்பட்டன.
2-வது அக்ரஹாரத்தில் விதிமுறைகளை கடைபிடிக்காத தனியார் வங்கிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சுகாதார அலுவலர்களின் ஆய்வின் போது, 12 வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த இரு நாட்களில் , முகக்கவசம் அணியாத 166 பேருக்கு தலா ரூ.200 வீதமும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 81 சிறு வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ.500 வீதமும், 22 பெரும் நிறுவனங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதமும், 2 நிறுவனங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதமும் என மொத்தம் ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது.