சேலம் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள 4 வாக்கும் எண்ணும் மையங்களிலும் கரோனா தொற்று தடுப்பு பணிகளை மேற்கொள்ள சுகாதாரத்துறையினர் 200 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். வேட்பாளர்களின் முகவர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்டவர்கள் கரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது கரோனா தொற்று நெகட்டிவ் சான்றிதழுடன் வாக்கு எண்ணும் மையத்துக்குள் வர வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் இன்று தனித்தனியாக கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை சார்பில் மேற்பார்வையாளர்கள் தலைமையில் 200 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செல்வகுமார் கூறியதாவது:
வாக்கு எண்ணும் மையத்துக்குள் வருபவர்கள் முகக் கவசம் அணிந்திருப்பது, உடல் வெப்பநிலையை சரிபார்த்து அனுமதிப்பது, அவர்கள் எடுத்து வரும் பொருட்கள் மீது கிருமிநாசினி தெளிப்பது, உள்ளே வந்தவர்களுக்கு கிருமிநாசினி கொடுத்து கைகளை சுத்தம் செய்யச் சொல்வது உள்ளிட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
வாக்கு எண்ணும் பணியாளர்களுக்கு கையுறைகள், முகக் கவச அட்டை, முகக் கவசம் ஆகியவை வழங்கப்படுகிறது. வேட்பாளர்களின் முகவர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பு முழு கவச உடை வழங்கப்படுகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் சுழற்சி முறையில் கவச உடை அணிந்திருக்க வேண்டும்.
வாக்கு எண்ணும் மையத்துக்கு அவசர தேவைக்காக ஒரு ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருக்கும். வேட்பாளர்களின் முகவர்கள், கரோனா தடுப்பு முழு கவச உடையை முறையாக அணிந்திருப்பதை உறுதிபடுத்துவது உள்ளிட்ட ஒவ்வொரு தொகுதிக்கான வாக்கு எண்ணும் இடத்திலும், சுகாதாரப் பணிகளை ஒருங்கிணைக்க, கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 16 பேர் நியமிக்கப்பட்டிருப்பர். 11 தொகுதிகளுக்கும் சுகாதாரத்துறை சார்பில் 200 பேர் நியமிக்கப்பட்டு, தொற்றுத் தடுப்பு பணிகளை ஒருங்கிணைப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரிபவர்கள் பயன்படுத்துவதற்கு சுமார் 50 ஆயிரம் முகக் கவசங்கள், வேட்பாளர்களின் முகவர்கள் பயன்படுத்த முழுகவச உடை 4 ஆயிரம், கையுறைகள் 20 ஆயிரம், முகக் கவச அட்டைகள் 10 ஆயிரம், கிருமிநாசினி 100 மில்லி பாட்டில்கள் 10 ஆயிரம் ஆகியவை தயாராக வைக்கப்பட்டுள்ளன.
மேலும், வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே கிருமிநாசினி, பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்கள், கையுறைகள் உள்ளிட்டவற்றை சேகரிக்க பைகள் வைக்கப்படும். சேகரிக்கப்பட்ட பைகளை தனியாக எடுத்துச் செல்ல வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.