Regional02

சேலம் மாவட்ட தேர்தல் முடிவு தமிழக அளவில் எதிர்பார்ப்பு :

செய்திப்பிரிவு

முதல்வர் மாவட்டம் என்பதால் சேலம் மாவட்ட தேர்தல் முடிவு தமிழக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக முதல்வர் வேட்பாளர் போட்டியிடும் எடப்பாடி தொகுதிஇடம் பெற்றுள்ளது. இத்தொகுதியில் முதல்வர் பழனிசாமி போட்டியிடுகிறார். மேலும், சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. சேலம் வடக்கு தொகுதியில் திமுக வெற்றி பெற்றது.

இந்நிலையில், தற்போதைய தேர்தலில் முதல்வர் போட்டியிடும் எடப்பாடி தொகுதி உள்ளிட்ட 11 தொகுதிகளின் வெற்றியை கைப்பற்ற வேண்டும் என முனைப்போடு திமுக தேர்தல் களத்தில் பணியாற்றியது.

அதிமுகவும் முதல்வர் மாவட்டத்தில் அனைத்து தொகுதியிலும் அதிமுக வெற்றி என்ற இலக்கை அடையும் வகையில் தேர்தல் களத்தில் பணியாற்றியது. அதிமுக கூட்டணியில் அதிமுக எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, கெங்கவல்லி (தனி), ஏற்காடு (எஸ்டி), ஆத்தூர் (தனி) ஆகிய 9 தொகுதிகளிலும், மேட்டூர், சேலம் மேற்கு தொகுதியில் பாமகவும் போட்டியில் உள்ளது.

சேலம் மாவட்டத்தில் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு சேலம் மாவட்டத்தில் அதிக தொகுதிகளை ஒதுக்காமல் 10 தொகுதியில் களம் இறங்கியது. ஓமலூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் சேலம் மாவட்ட தொகுதிகளை கைப்பற்ற முனைப்பு காட்டியுள்ள நிலையில் முதல்வர் மாவட்டம் என்பதால், சேலம் மாவட்ட தேர்தல் முடிவு தமிழக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT