ஈரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழுக் கூட்டம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ரகுராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
ஈரோடு மாவட்டத்தில் நாள்தோறும் 400-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால், மாவட்ட நிர்வாகம் அதிக கவனத்துடன் தொற்றை கட்டுப்படுத்த முயற்சிகளை எடுக்க வேண்டும். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள டி.பி.சேனடோரியம் வளாகத்தை முழுமையாக கரோனா சிகிச்சைக்காக பயன்படுத்த வேண்டும். பெருந்துறை மருத்துவக் கல்லூரியை கரோனா வார்டாக மாற்றியதால், பிற உள், வெளி நோயாளிகள் சிகிச்சை பெற சிரமம் ஏற்படுவதால், அருகே உள்ள மண்டபத்தில் சிகிச்சையை செயல்படுத்த வேண்டும்.
ஈரோடு அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி செய்யும் அனைத்து மருத்துவர்களுக்கும் கரோனா பணி வழங்க வேண்டும். அதோடு, முன் களப்பணியாளர்கள் வேலை நேரத்தை முறைப்படுத்த வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவு தடுப்பூசி செலுத்த வசதி செய்ய வேண்டும்.
ஈரோடு மாநகரில் உள்ளது போல நடமாடும் மருத்துவ கண்காணிப்பு குழுக்களை, கிராமப்பகுதியிலும் ஏற்படுத்தி சிகிச்சைவழங்க வேண்டும். கரோனாவுக் கான தடுப்பூசி தட்டுப்பாடு இன்றி கிடைக்கவும், ரெம்டெசிவிர் மருந்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதை விட, அதனை அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.