Regional02

நெல்லையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு - தடுப்பூசி போடும் பணி தொடங்கவில்லை :

செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசிபோடும் பணிதிட்டமிட்டபடி நேற்று தொடங்கப்படவில்லை. போதுமான அளவுக்கு தடுப்பூசிகள் வந்துசேரவில்லை.

நாடு முழுவதும் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியது. அவர்களுக்கு மே 1-ம் தேதி முதல் தடுப்பூசி போடும்பணி தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்தனர். ஆனால், அந்தந்த மாநிலங்களுக்கு போதுமான தடுப்பூசிகள் இன்னும் அனுப்பி வைக்கப்படவில்லை. இதனால் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை.

திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி பல்நோக்கு மருத்துவமனையில் ஏற்கெனவே முதல்தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி போடும் பணி நேற்று நடைபெற்றது. தற்போது தடுப்பூசி போடுவதற்கு புதிதாக ஏராளமானோர் வருகின்றனர். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடுவதற்கு தேவையான அளவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, மருத்துவமனை வட்டாரங் கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT