திருநெல்வேலி மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சட்டப் பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெறுகிறது. வெற்றிக் கொண்டாட்டமும், ஊர்வலமும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வெற்றி சான்றிதழை பெற, வெற்றி வேட்பாளருடன் இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 144 தடை உத்தரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் இருப்பதால் பொதுமக்களோ, கட்சி உறுப்பினர்களோ வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியில் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். திருநெல்வேலி- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
தேர்தல் நடத்தும் அலுவலரால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை உள்ள முகவர்கள் மட்டுமே காலை 6 மணியிலிருந்து வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படும் முகவர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களான செல்போன், லேப்டாப், மின்னணு பொருட்கள், தீப்பெட்டி, சிகரெட் மற்றும் எந்த ஆயுதங்களையும் எடுத்து செல்லக்கூடாது. கட்சி சின்னங்கள் அனுமதிக்கப்படாது. வாக்கு எண்ணும் மையத்தில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதால் தண்ணீர் பாட்டில்கள் அனுமதிக்கப்படாது. முகக்கவசம், சமூக இடைவெளி, கை கழுவுவது என்று சுகாதார நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.
அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலும், அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எதிரே எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான காலி மைதானத்திலும், மார்ஷரி பெட்ரோல் நிலையம் அருகிலுள்ள இடத்திலும் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.
இந்த வழிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.