Regional01

முன்கார் சாகுபடிக்கு மணிமுத்தாறு அணை திறப்பு : 2,756 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் முன்கார் சாகுபடிக்காக மணிமுத்தாறு பெருங்காலில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் 2,756 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கார் மற்றும் பிசான சாகுபடி பிரதானமாக நடைபெறுகிறது. அணைகளில் நீர் இருப்பை பொறுத்து முன்கார் சாகுபடிக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. மணிமுத்தாறு பெருங்கால் பாசன விவசாயிகள் பல ஆண்டுகளாகவே முன்கார் சாகுபடியில் ஈடுபடுகிறார்கள். இவ்வாண்டு மணிமுத்தாறு அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் அணையிலிருந்து முன்கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துவந்தனர். 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நேற்று காலை நிலவரப்படி 89.43 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 7 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 250 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மணிமுத்தாறு அணையிலிருந்து முன்கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அண்ணாதுரை உள்ளிட்ட அதிகாரிகள் மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறந்துவிட்டனர்.

ஆகஸ்ட் 13-ம் தேதி வரை 105 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும், இதன்மூலம் ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பாங்குளம், மூலச்சி, உளுப்படிப்பாறை, தெற்கு கல்லிடைக்குறிச்சி, பொட்டல் ஆகிய பகுதிகளில் உள்ள 2,756.62 ஏக்கர் பாசன வசதி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிமுத்தாறு அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் அணையிலிருந்து முன்கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

SCROLL FOR NEXT