கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம். 
Regional03

வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை சித்திரங்கள் : கயத்தாறு மணிமண்டபத்தில் வைக்க வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கயத்தாறில் உள்ள வீரபாண்டியகட்டபொம்மனின் மணிமண்டபத்தில் அவரது வாழ்க்கை சித்திரங்கள் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சுதந்திர போராட்ட வரலாற்றில் வீரபாண்டிய கட்டபொம்மனின் பங்கு மகத்தானது. தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியை ஆட்சி செய்த வீரபாண்டிய கட்டபொம்மன், ஆங்கிலேய அரசின் வரி வசூலுக்கு எதிராக குரல் கொடுத்தார். அதனால் ஆத்திரம் கொண்ட‌ ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியால் அவரை கைது செய்து, கயத்தாறில் தூக்கிலிட்டனர்.

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் நடிகர் சிவாஜி கணேசன்தனது சொந்த நிதியில் கட்டபொம்மனுக்கு சிலை வைத்தார். கடந்த 1970-ம் ஆண்டு இச்சிலை திறக்கப்பட்டது. இதனருகே பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வடிவில் ரூ.1.20 கோடியில் மணிமண்டபம் கட்டப்பட்டு, கடந்த 2015-ம் ஆண்டுதிறக்கப்பட்டது. இந்த மணிமண்டபத்தில் 7.25 அடி உயரத்தில் கம்பீரமான தோற்றத்தில் கட்டபொம்மனின் வெண்கலச்சிலை வைக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு கட்டபொம்மனுக்கு முடி சூட்டுவது போன்ற படமும், முயல் ஒன்று நாயை விரட்டிச் செல்வது போன்று படமும் மட்டுமே உள்ளன.

கயத்தாறு ஊருக்கு வெளியே கன்னியாகுமரி - சென்னை தேசியநான்குவழிச்சாலையோரம் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு குறித்து அங்குள்ள வழிகாட்டி விளக்குகிறார். ஆனால், வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து 2 சித்திரங்களைத் தவிர வேறு எந்தவொரு சித்திரங்களும் இல்லை என்பது சுற்றுலா பயணிகளின் ஆதங்கமாக உள்ளது.

கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாறு குறித்து கூடுதல் சித்திரங்கள் டிஜிட்டல் பிரிண்டிங்கில் அமைக்க வேண்டும். அவர் பயன்படுத்திய உடை, வாள் உள்ளிட்ட பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும். குடிநீர் வசதி செய்து தர வேண்டும். 3 அடுக்கு கட்டிடமான மணிமண்டபத்தின் ஒரு தளத்தல் ஒளி, ஒலி காட்சி அமைக்கவேண்டும் என, சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

SCROLL FOR NEXT