திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை தெற்கு தெருவைச் சேர்ந்த மீனவர்கள், வடக்கு தெருவைச் சேர்ந்த மீனவர்கள் இடையே மோதல்போக்கு இருந்து வருகிறது.
தெற்கு தெருவைச் சேர்ந்த ஜெர்சன்(25), கடந்த 29-ம் தேதிகாலையில் வடக்கு தெருவில் உள்ள ஹோட்டல் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அப்பகுதி மீனவர்கள் சிலர் ஜெர்சனை, அவதூறாக பேசி தாக்கியுள்ளனர். திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் ஜெர்சன் புகார் அளித்தார்.
இந்த சம்பவத்தின் தொடர்ச்சி யாக இரண்டு தெருவைச் சேர்ந்த மீனவர்கள் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டது. 7 பேர் காயமடைந்தனர். 18 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மோதலில் காயம் ஏற்பட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ சந்தித்து ஆறுதல் கூறினார்.