கரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையத்தை ஈரோட்டிலும் திறக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம், காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் மற்றும் மொடக்குறிச்சி வட்டார காங்கிரஸ் தலைவர் முத்துக்குமார், எஸ்சி, எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் சிவக்குமார், வட்டார துணைத்தலைவர் தில்லை சிவக்குமார், சிறுபான்மை பிரிவு நிர்வாகி மணிகண்டன் உள்ளிட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:
கரோனா தொற்றால், ஈரோடு மாவட்டத்தில் தினந்தோறும் சராசரியாக 450 பேருக்கு மேல் பாதிக்கப்படுகின்றனர். இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது, இந்நிலையில் நோய் தொற்று பாதித்தவர்களுக்கு, அவசர சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு ஈரோடு மாவட்டத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வருகிறது.
குறிப்பாக தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள், இந்த மருந்தினை வாங்கி வருமாறு நோயாளிகளின் உறவினர்களிடம் கூறுகின்றனர். மருந்தகங்களில் இந்த மருந்து இல்லாததால், என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர். இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், சென்னையில் அரசு சார்பில் கீழ்பாக்கம் மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையம் செயல்படுவது போல், ஈரோட்டிலும் அரசு சார்பில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.