குழந்தைத் தொழிலாளர் சிறப்பு பயிற்சி மைய குழந்தைகளுக்கு ஐந்து ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள கல்வி உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும் என மத்திய அமைச்சருக்கு திருப்பூர் எம்பி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக திருப்பூர் எம்பி சுப்பராயன், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடித விவரம்:
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் நாடெங்கும் செயல்படுத்தப்பட்டு வருகிறது இத்திட்டத்தின்கீழ் 14 வயதிற்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, அவர்களுக்கு கல்வி வழங்கும் வகையில் அவர்களது குடியிருப்புகளிலேயே, உள்ளூர் தொண்டு நிறுவனங்களை கொண்டு குழந்தைத் தொழிலாளர் சிறப்பு பயிற்சி மையங்கள் நடத்தப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 16 மாவட்டங்களில் நடந்து வரும் 300 சிறப்பு பயிற்சி மையங்களில் 6000 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 15 சிறப்பு பயிற்சி மையங்களில், 294 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இதில், ஈரோடு மாவட்ட மலைக்கிராமங்களில் பர்கூர், குன்றி, விளாங்கோம்பை என 6 பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர் சிறப்பு பயிற்சி மையங்களை சுடர் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறது.
குழந்தைத் தொழிலாளர் சிறப்பு பயிற்சி மைய குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை கடந்த ஐந்து ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. பயிற்சி மையங்களில் பணியாற்றும் பயிற்றுநர்களுக்கும் கடந்த ஓராண்டாக மதிப்பூதியம் வரவில்லை எனவும் அந்த நிறுவனம் புகார் தெரிவித்துள்ளது.
ஆகவே, இந்த பயிற்சி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கான கல்வி ஊக்கத் தொகை மற்றும் பயிற்றுநர் மற்றும் உதவியாளர்களுக்கான மதிப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.