கர்நாடகாவில் பொதுமுடக்கம் காரணமாக தாளவாடி செல்வோர் தலமலை சாலை வழியாக கட்டணமின்றி சென்று வர அனுமதிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வனத்துறையினரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
ஈரோடு மாவட்ட எல்லைக்குட் பட்ட மலைப்பகுதியான தாளவாடிக்குச் செல்லும் வாகனங்கள், திம்பம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது தூரம் கர்நாடக மாநில எல்லைக்குள் சென்ற பின்னர், தாளவாடிக்கு செல்ல முடியும். கரோனா பரவல் காரணமாக கர்நாடகாவில் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால், அந்த சாலை வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
அதே நேரத்தில் திம்பத்தில் இருந்து தலமலை வழியாக தமிழக எல்லைப் பகுதிக்குட்பட்ட சாலை வழியாகவும் தாளவாடிக்குச் செல்ல வழியுள்ளது. இந்த சாலையில் பயணிக்க வனத்துறை கட்டணம் வசூலித்து வருகிறது. மேலும், அடர்ந்த வனப்பகுதி வழியாக தலமலை சாலை செல்வதால், மாலை 6 மணிக்கு மேல் போக்குவரத்திற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் பொது முடக்கம் முடியும் வரை திம்பம் வனச்சாலையில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது.
இரவு 10 மணி வரை திம்பம் வனப்பாதையில் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் என தாளவாடி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பவானிசாகர் தொகுதி வேட்பாளர் பி.எல்.சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் நேற்று திம்பம் வனத்துறை சோதனைச்சாவடியில், வனத் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் இப்பிரச்சினை குறித்து முறையிட்டனர். மேலும், இதுகுறித்து மாவட்ட வன அலுவலரிடம் பி.எல். சுந்தரம் பேசினார்.
இந்நிலையில், திம்பத்தில் இருந்து தலமலை வழியாக தாளவாடி செல்லும் சாலையில், கட்டணமின்றி வாகனங்கள் செல்ல அனுமதி அளிப்பதாகவும், இரவு நேர வாகன அனுமதி குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் வனத்துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.