திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு அமைக்கப்பட்டுள்ள 4 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜமால் முகமது கல்லூரியிலும், திருவெறும்பூர், ரங்கம், மணப்பாறை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரியிலும், லால்குடி, மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சமயபுரம் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியிலும், துறையூர், முசிறி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு துறையூர் இமயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நாளை (மே 2) நடைபெறவுள்ளது.
வாக்கு எண்ணும் மையங்களில் அஞ்சல் வாக்குகளை பிரித்து எண்ணுவதற்கு தனித்தனி அறைகள் கொண்ட பெட்டி தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு மேசைகள், இந்த பணியை பார்வையிட வரும் வேட்பாளர்களின் முகவர்கள் அமருவதற்கான இடங்கள், முகவர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளே செல்லவும், வெளியே வரவும் தடுப்புக்கட்டைகளுடன் கூடிய பாதைகள், வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை மற்றும் கிருமி நாசினி திரவம் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான நாளை கூடுதலாக போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.